Author: கிரிஷன்
•6:07 AM
எதை,என்ன ,ஏன் என்று சொல்லாமல்
என்னையும் ஏதோதோ
எழுத சொல்பவளே ,,
நீ கேட்டதும் கொடுக்க நான்
பாட்டெடுக்கும் புலவன் அல்ல- என்
தாய் தந்தையோடு வந்த பொருள்
தமிழும் அல்ல

என்னைத்தொலைத்து எழுதித்தொலைத்த
எத்தனையோ கவிதையுண்டு
இன்றுவரை பதிலில்லை..
இருப்பினும்
நான் இறப்பினும் கரையாத
கல்லுனக்கு
இன்றும் ஒரு  கவிதை........
இது கவிதை அல்ல
நான் உனக்கு எழுதும்
கவிதைகள் தோன்றும் கதை .....

வாய்த்தீனிக்கு வானில்
வட்டமிடும்  கழுகாய்
உன் நினைவுகள் என் தூக்கம் விழுங்க
இரவில் எனை வட்டமிடும்..
அத் தூக்கம் தொலைத்த இரவுகளில்
வண்டுகளின் ரீங்காரமாய்
செவியில் அடிக்கடி உன்
சிரிப்பொலி கேட்கும்
நீ ஏடுத்துவைத்த  காலடி தொட்டு
உதிர்த்துப்போன  தலைமுடி வரை
இன்றைய உன் அசைவுகள் அத்தனைக்கும்
 என் கண்கள் கணக்கு வைத்திருக்கும்..
எண்ணுகையில் ஒன்று குறைந்ததாக
அவ்வப்போது அவை தம்முள்
கை கலத்துக்கொள்ளும்...
பார்த்ததை கவிதையாய் பதிவிடசொல்லி
கண் இரண்டும்  மூளைக்கு
தகவல் அனுப்பும் ...

நீ தொட்டுப் போகையில்
சிலிர்த்துக்கொண்ட என் தோல்
இரவுகளில் மட்டும் ஏனோ
வியர்த்துக்கொட்டும்..
படுக்கையில் பாதியுயிர் போவது போல்
உடலுக்குள் ஏதோ புது
மாற்றங்கள் அரங்கேறும்
இது 'காதல்' இன் விளைவு
 அவளை கைது செய் என்று நுரையீரல்
மூச்சிழுத்துக் கூச்சல் போடும்
நான் இப்போதே அவளை
காணவேண்டும் என்றென்
'கவித்துவம்'  ஏக்கத்தில்
தேடத்தொடங்கும்...

இமைக்கதவை மூடி இதையத்தை திறக்கையில்
'காதலும்' 'கவித்துவமும்' சந்தித்துக்கொள்ளும்
காதலின் பால் கொண்ட கவர்ச்சியால்
 'கவித்துவம்' கன்னிமையை 'கவிதை'க்கு காணிக்கையாக்கும்
இரண்டும் இரண்டற கலந்து புணர்ந்திட
இதயம் தன் அறையொன்றை இரவல் கொடுக்கும்
கவித்துவத்தில் 'காதல்' விதைத்த விதை
கருவறையில் கவிதையொன்றுக்கு 
கருவாய் உதிக்கும்

உதித்த கரு பிறக்கும் வரை
உள்ளுக்குள் இருந்தென்னை
உதைத்துக்கொண்டிருக்கும்
இன்றைய கருவுக்கான கவிதயை பிரசவிக்க
கட்டிலை விட்டெழுந்து கால்கள் நடக்கத்தொடங்கும்
நித்திரையும், நிம்மதியும் தொலைந்து போன நடுநிசியில்
தனிமைக்கு நானும் எனக்கு தனிமையும்  துணையாய்
யாருமற்ற தார்ச்சாலைகளில் என் பயணம் தொடங்கும்
கருவுக்கு பொருள் சேர்த்து கவியாக்க
தெருவுக்கு வந்த என்னை
யாருமற்ற அநாதையோ எவருமற்ற ஏழையோ
என்றெண்ணி தெருவிளக்குகள் கூட
எள்ளி நகைக்கும்...
இதையெல்லாம் சட்டை செய்யாத என்மனம்
இன்றைய நாளை மீட்டுப்பார்க்கும் நேரமது........

நான் வார்த்தைகள் கோர்த்து வரிச்ச்சரம் தொடுக்க
தார்ச்சாலையில் ஒரு கவிதைக்கர்ப்பிணியாய்
நீ அருகில் நின்ற ஒவ்வொரு கணமும் என் 'கவிதை'ச்சேய்க்கு
கை,கால்களாய்
நெருங்கி வருகையில் நீ தந்த உஷ்ணம்தான்
'அவளுக்கு'
மூசசுக்காற்றாய்...
அரபுக்குதிரை உந்தன் காந்தக்கட்டழகுதான்- என்
மரபுக்கவிதைக்கு திரு உடலாய்
ஊண் மறந்து நான் இழந்த எடையில்
குறைந்த  தசையே கவிச் சிசுவுக்கு தசையாய்
உன் மனம் சேர ஏங்கி நான் அழுத கண்ணீர்தான்
'அவள்' நாடிக்குள் ஓடிடும் செங்குருதியாய்
உயிர்..........??????
அது நான் என்னுயிர் பிழிந்து அதற்கு கொடுத்தது
பச்சையுடம்புக்காரன் எனக்கு
நேற்றைக்கு பிறகு இன்றும் ஒரு பிரசவம்
கொஞ்சி மகிழு நீ கேட்ட
'கவிதை'க்குழந்தையை....

கவிதை என்பது நீ குடிக்கும் காலைக் காபி அல்ல பெண்ணே ...
புலவனின் ஐம்புலன்களும் பறித்து அரைநிர்வாணமாக்கி
அவன் வலியை புசிக்கும் காதலுக்கு
அவன் கொடுக்கும் சாஹித்ய விருது
ஒருதலைக்  காதல் எனும் ஆளில்லாத் தீவுகளில்
கண்,கை, கால் கட்டிவிடப்பட்டவர்கள் பாடும் ஒப்பாரி
நேற்றொரு குழந்தையும்
 இன்றிரு குழந்தையும் ஈனும்
 பச்சையுடம்புக்காரியின் பிரசவ வலி
|
This entry was posted on 6:07 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: